1962ஆம் வருடம் . அன்றைய வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மேற்குக் கடைசியில், மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி இருக்கும், செழிப்புடைய பெரிய ஊர், இராசபாளையம். மழைக் காலங்களில் ஊருக்குக் கிழக்கே இருக்கும் சஞ்சீவி மலையிலிருந்து, கீழே ஒடி வரும் தண்ணீர், கழுதைக் கடவு வழியாக இறங்கி, வடூரணிக்குப் சென்றடையும்.
மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஓடிவரும் தண்ணீர், பல்லிளிச்சான் கணவாய், (காரணப் பெயர்) வழியாகவும் அய்யனார் கோவில் அருவி வழியாகவும் கிழக்கு திசை நோக்கி வந்து, பல பகுதிகளிலும் பாய்ந்து ஊரை செழுமைப்படுத்தும்.

6, 7மற்றும் 8 ம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த நாங்கள் 65 நபர்கள், நான்கு ஆசிரியர்கள் தலைமையில் காலை ஆறு மணிக்கு, அய்யனார் கோவில் அருவி நோக்கி சிறு சுற்றுலா பயணமாக சென்று கொண்டிருந்தோம்.
முடங்கியாறு சாலையில், பொன் விழா மைதானத்தை கடந்ததும் எங்கள் வரலாற்று ஆசிரியர், தங்கப்பாண்டியன், ‘டேய்! அங்க பாருங்கடா மேற்குத் தொடர்ச்சி மலையில, வட மேற்கு திசையை பாருங்க வெள்ளைப் பல்காரன் சிரிக்கிறது போல, அழகா மலையிலிருந்து, நீர் கீழே ஓடிவருது. அது தாண்டா, பல்லிளிச்சான் கணவாய். நாம, இப்ப எட்டு மைல் தூரத்துல இருக்கிறோம். இந்த இடத்திலிருந்து பார்த்தாலே தண்ணி ஓடி வர்றது தெரியுதுனா, அருகில் சென்று பார்த்தா, எவ்வளவு அகலத்துக்கு, பிரமாண்டமா இருக்கும்னு கற்பனை செய்து பாருங்க”.
ஒரு மாணவன், ‘அந்தத் தண்ணிரானது எங்கே போகுதுங்க சார்”?. ஆசிரியர், ‘மேற்குத் தொடர்ச்சி மலையில இருந்து வர்ற நீர் தான், முடங்கியாறுக்கு வந்து, அருகு பத்திக் கால்வாய் (குத்தப்பாஞ்சான்), பெரியகுளம், அப்பாள் ராசா ஊரணி, புளியங்குளம், பெரிய மந்தை மற்றும் கொண்டனேரிக் கண்மாய்னு தொடர்ச்சியா வந்து, ஊரை வளமாக்குது.
அன்று ஊரையொட்டி இருக்கும் பெரிய மந்தையில், நீச்சலடிக்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. பழைய பாளையம், பெரிய கடை பசார், சுரைக்காய்ப்பட்டித் தெரு, தம்பா பிள்ளைத் தெரு, மக்கள், பெரிய மந்தையில் இருக்கும் நீரில் குளித்தனர். துணி துவைத்தனர். மலையில இருந்து வருகின்ற இந்த நீருல, ஊருக்குக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்தும் முயற்சி நடக்குது” என்று ஆசிரியர் சொன்னார். காலை ஏழு மணியளவில் முடங்கியாற்று பகுதியில் இருந்த மரங்களடர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எடுத்துச்சென்ற புளியோதரையைச் சாப்பிட்டோம்.
முடங்கியாறு கடந்ததும், சாலை பகுதியில் யானையின் லத்தி (யானையின் விட்டை – கழிவு) கிடந்தது. மாணவர்கள் ஓடிப்போய், யானையின் லத்தி மீது இரண்டுகால்களாலும் மிதித்தார்கள். நாங்கள் செருப்பில்லாமல் வெறுங்காலுடன் நடப்பவர்கள். யானையின் கழிவை மிதித்தால், காலில் முள் குத்தினால் கூட, பாதிப்பு ஏற்படாது என்பது மாணவர்களுக்குக் சொல்லப்பட்டுள்ள செவிவழிச் செய்தி.
ஆசிரியர் தங்கப்பாண்டியன், ‘யானை லத்தி இன்னும் காயல. நேத்து ராத்திரி யானைஇந்த இடத்துக்கு வந்துட்டுப் போயிருக்குது” என்று கூறினார். ஆறாவது மைல் கடந்ததும் இரண்டு புறமும் வரிசையாகப் புளியமரங்கள். சில புளிய மரங்களின் காய்கள் மட்டும் உள்ளே சிவப்பு நிறமாக இருக்கும். (வழக்கமான கலர் பச்சை).
படிப்படியாகச் சரிவாக உயரே செல்கின்ற பாதை. 7 மைல் தூரம் கடந்து வந்துவிட்டோம். நாங்கள் செல்கின்ற பாதையில் குறுக்கிடும் ஓடையின் குறுக்கே, தண்ணீரில் இறங்கி பாதுகாப்பாக மேற்கொண்டு நடந்து சென்றோம். அருவியானது சுமார் 1 மைல் தூரம் இருக்கிறது.
ஆசிரியர் அமைதியாக இருந்து, கூர்ந்து பார்க்க சொன்னார். அமைதியான அந்தக் காலை வேளையில், அமைதியான அந்தக் காட்டுப் பகுதியில், 1 மைல் தூரத்தில் தண்ணீரைக் கொட்டும் அருவியின், ஓசை மெதுவாகக் கேட்டது. மேலே தொடர்ந்து அருகில் செல்லச் செல்ல, அருவியின் ஓசையானது படிப்படியாக அதிகசத்தத்துடன் தெளிவாகக் கேட்டது.

அய்யனார் கோவில் அருவி, இராசபாளையம் நகரத்திலிருந்து கிடத்திட்ட 2000அடி உயரத்திலிருக்கும். அருவி உள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரம். அருவிக்குக் கீழே சற்றுத் தொலைவில், அய்யனார் கோவில் உள்ளது.
ஆசிரியர் தங்கப் பாண்டியன், ‘இப்படியே தொடர்ந்து மலையில ஏறி, மலையை கடந்து அந்த வழியா இறங்குனா, கேரளா வந்துடும். தமிழ்நாடு எந்த இடத்தில முடியுது?. கேரளா எந்த இடத்துல தொடங்குதுன்னு? சொல்ல முடியாத அளவில், அடர்ந்த காட்டுப் பகுதி. கேரளாங்குறது, நமது பழந்தமிழ் சேரநாடு. மேகமலை (காரணப் பெயர்) எஸ்டேட் இதிலிருந்து பக்கம்.
திருவனந்தபுரத்துல இருந்து மதுரை செல்லும் விமானம், இந்த மலைப்பகுதியை கடந்து செல்லும். இந்த மலைல ஏறிப்போனா, இரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சிகள் நிறைய இருக்கும்”. இங்கிருந்து தென்மேற்கு வழியாக போய் அந்தப் பக்கம் இறங்குனா, பொன்னம்பல மேடு, அப்புறம் சபரிமலை வந்துடும்”. பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்துள்ளதால், ஆசிரியர்களிடம், மாணவர்கள் வேடிக்கையாகப் பேச ஆரம்பித்தனர்.
அசோகன் எனும் மாணவன், ‘பாண்டிய நாட்டிலிருந்து கிளம்பி வந்து, சேர நாட்டு எல்லை பகுதியில் நிற்கிறோம்”. தமிழ் ஆசிரியர் ஆதிமூலம், ‘இடையில் மலை பகுதி குறுக்கிட்டதால, போக்குவரத்து கஷ்டமாகி, தொடர்பு குறைந்து, சேரநாட்டுத் தமிழ் கொஞ்சங் கொஞ்சமா மலையாள மொழியா மாறிருச்சு”. மலை ஆழம் தான் மலையாளம்.
‘சோழ நாடு, நம் அருகாமையில் இல்லை” என்றான் ஒரு மாணவன். வாசிமலை எனும் மாணவன், “சார்! நிலத்தை விற்றவர், நிலத்தை வாங்கியவர் இரண்டு பேருமே நிலத்தில் இருக்கும் புதையல் தனக்குச் சொந்தமில்லை என வாதாடிய பொழுது, கரிகால் சோழன் முதியவர் வேடமிட்டு வந்து, ஒருத்தர் மகனுக்கும் ஒருத்தர் மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சு, பிரச்சினையை நீக்கி வைத்தார்னு சொன்னீங்க.
அவங்களுக்கு திருமண வயசுல பிள்ளைகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது ஒருவரது ஒரே மகள் வயதில் பெரியவளாயிருந்து மற்றவரது மகன் வயதில் குறைந்தவராயிருந்திருந்தா, கரிகாலன் மன்னன் தடுமாறிப் போயிருப்பார், சார்!”
தமிழ் ஆசிரியர், ‘பழந்தமிழர்கள், உழைத்து கிடைக்காத பொருளுக்கு, அல்லது மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப் படாதவர்கள் என்பது தான் இதில் முக்கியச் செய்தி. திருமணம் செய்து கொள்ளும் வயதில் இருவீட்டிலும் பொருத்தமான பிள்ளைகள் இல்லை என்ற நிலை இருந்தால், கரிகால மன்னன் வேறு பொருத்தமான நீதியினை அளித்திருப்பார்”.
ஆசிரியர், ‘இங்கிருந்து தெற்கே 10 மைல் தூரம் சென்றால், சிவகிரி வந்துடும். அங்கே இருக்கும் மலைல இருந்துதான் பெரியாறு உற்பத்தி ஆகுது. வடக்குபுறம், மலையின் உச்சில, டிரான்ஸ் பார்மர் வரிசையா இருக்குது பாருங்க. இது நம்ம முதலமைச்சர் காமராஜர் போட்ட திட்டத்தின் படி, பெரியாறு அணையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் இந்த மலையின் வழியா, இந்த டிரான்ஸ்பார்மரில் நம்ம கிராமத்துப்பக்கம் வருது. ‘பென்னிகுவிக்”னு பெயருடைய வெள்ளைக்காரன் அருமையாக்கட்டிய இந்த அணையிலிருந்து மின்சாரம் வருது”.
அய்யனார் கோவில் அருவியின் எதிரே உள்ள பெரிய தீவுத்திட்டில், மாணவர்கள் எடுத்து வந்த சாப்பாடு, ஆடை, பை இவற்றை வைத்துவிட்டு, மாணவர்கள் அருவியில் குளித்து மகிழ்ச்சியோடு ஆட்டம் போட்டனர். சுத்தமான, சுவையான, மூலிகை தன்மை நிறைந்த அருவி நீர்.
மலையில் வாழும் இரண்டு பளியர்கள் (ஆதிவாசிகள்) வந்தனர். கருப்பு நிறம். மெலிந்த உடல், குள்ளமான உருவம். உடன் ஒரு நாய் வந்தது. தமிழ் ஆசிரியர், ‘பளியர்கள் நம்முடைய முன்னோர்கள். நாம் சமவெளிப் பகுதிக்குச் செல்லாமல் இந்த மலையிலேயே வாழ்ந்திருந்தால், இவர்களைப் போலத்தான் நாமும் இருந்திருப்போம். நாம் படிக்கிறோம். நாகரிகமாக உள்ளோம் எனப் பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.
ஆனால் இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில், திசை காட்டுகருவியோ, அறிவிப்புப் பலகையோ, எழுத்துகளோ இல்லாதபகுதியில, சரியாக போய் திரும்பி வருவதும் யானை, புலி, மான், காட்டுப்பன்றி, காட்டு அணில் மற்றும் மற்ற மிருகங்கள் அலையும் காட்டுப்பகுதியில் இவைகளுடன் வாழ்வதும் பளியர்களின் பெரிய திறமையே. இவர்கள் இயற்கையான சூழ்நிலையில், இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்”.
‘மலையில் இருக்கும் எஸ்டேட்டில் பணி செய்யும் ஆட்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, உப்பு, இவைகள் அனைத்தையும் கொண்டு சேர்க்கறது இந்தப் பளியர்கள் தான். இரவு 7 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, எட்டு மைல் நடந்து, ஒன்பது மணிக்கு, இராசபாளையம் அம்பலப்புளி பசார் வந்து, மளிகைக் கடையில் 30 கிலோ எடை அளவுக்குப் பொருள்களை வாங்கி அதை எடுத்து, அந்த மூட்டையை முதுகுல தூக்கிக்கிட்டு, அசோக் தியேட்டர்ல இரவுக் காட்சி படம் பார்ப்பாங்க.
படம் அதிகாலை 1 ½ மணி அளவில் முடியும். படம் முடிந்து டீ குடிச்சுட்டு,நடக்க ஆரம்பித்து காலை 5 மணிக்கு அய்யனார் அருவிக்கு வந்துடுவாங்க. 5 மணிக்கு முன்னால மலையில ஏறி போனா மிருகங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். விடியப்போற சமயத்துல,பயமில்லாம தைரியமா இன்னும் 6 மைல் நடந்து, மலை உச்சிக்கு சென்று, எஸ்டேட் பகுதிக்கு கொண்டு போய்ச் சேர்த்துடுவாங்க. அதுக்குப் பணம் கொடுப்பாங்க. முதுகுல 30 கிலோ எடைக்கு மேல் தூக்கிக்கிட்டு, மலையில் ஏறுவது மிகவும் சிரமமான காரியம். இந்தக்கடும் உழைப்புல தான் வருமானம் வருது, படம் பார்க்கணும்னு, ஆசையில அவங்க தியேட்டருக்குப் போகலை. காலை 2 மணி வரை நேரம் போகணுமுன்னு குறைஞ்ச செலவுல (25 பைசா)படம் பார்க்க ஒரு நல்ல வழி தான் சினிமா தியேட்டர்”.
‘மலைக்குமேல் பல குகைகள் இருக்கின்றன. ஒருசில குகைகளில் குனிந்து அல்லது தவழ்ந்து தான் உள்ளே செல்ல வேண்டும். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வராது. வெயில் உள்ளே வராது. நம்மை மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அருமையான இடம்”.
Rajapalayam Ayyanar waterfall
‘அய்யனார் அருவிக்கு மேல், மலை மேல் ஏறி போய் கொண்டே இருக்கலாம். அங்கங்கு குளித்து சந்தோஷப்படும் இடங்களும், சாப்பிடுவதற்கு உண்ணத்திட்டுகளும் வந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கூட்டமாக மக்கள் வந்தாலும், சிரமமில்லாமல் குளிக்கலாம். உடலில் தெம்பும் துணிச்சலும் உள்ளவர்கள், அருவிக்கு மேல் 2 மைல் தூரத்திலிருக்கும் வழுக்குப் பாறை பகுதி வரை சென்று வருவதுண்டு. பெரிய வட்ட வடிவம் கொண்ட பாறை. அப்படியே உட்கார்ந்தாலே போதும்.
ஓடிவரும் தண்ணீரின் வேகம், நம்மை வழுக்கிக் கீழே தள்ளிவிடும்.நாம் கீழே விழும் இடம், சற்று ஆழமாக நீச்சலடித்துக் குளிப்பதற்கு வசதியாக இருக்கும். நீர் ஓடி கொண்டிருக்கும் வழிக்குப் பக்கத்தில், நிறைய பாறைகள் ஒன்றன் மேல் ஒன்று, அடுக்கியது போல, வந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு பாறையும் வெவ்வேறு வடிவதுடன் ஒன்று போல் இன்னொன்று இருக்காது. ஆனால் அவை எல்லாம் கருங்கல் பாறைகள். தனித்தனியான பாறை. ஒட்டு மொத்தமாக மலை. பாறைகள் ஒன்றையொன்று தாங்கிப்பிடிதிருக்கும் நேர்த்தியினை, நல்ல கூட்டுக் குடும்பத்தோடும், ஆலமர விழுதோடும் ஒப்பிடலாம்.
அருவிக்கு மேல் சுமார் 300 மீட்டர் தொலைவில் கேணி என்ற ஒரு இடம் உள்ளது. அங்கு வறண்ட கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். அங்கு வாழும் யானைகள், புலிகளுக்கு அது ஒரு அமுதசுரபி. தகதகக்கின்ற சூரிய ஒளியில்,மூன்று அடி ஆழத்தில், பால் வெள்ளை வடிவில், ஒளிரும் தரை மணல் உள்ளது போல் தெரியும். அந்த நீரினுள் குதித்தால், பனிரெண்டு அடி ஆழத்திற்கு மேல் இருக்கும். தகதகக்கும் சூரியனும், ஒளிரும் வெண்மணலும் நம் கண்களை ஏமாற்றி விடுகின்றன. அதில் குதித்து நீராடி மகிழ்வது, ஆனந்தமாக இருக்கும்.

அப்பொழுது காலையும், மதியமும் அங்கு சமைத்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் வீடு திரும்பும் நோக்கத்தில் சுமார் 50 பேருடன் ஒரு குழு, சமையல் சாமான்கள் ,பொருட்களுடன் அருவிக்குக் கீழிருந்த தீவுத்திட்டில் வந்து இறங்கியது. சமையல் பொருட்கள் மாட்டுவண்டியில் வந்தன. வந்தவர்கள் சைக்கிளில் வந்திருந்தார்கள். ஒரு ஆளுக்கு ரூ. 2½ கட்டணம் வசூலித்து காலை உணவுக்கும் மதியம் கறிச்சாப்பாட்டுக்கும் என்று சொல்லி அந்தக் குழுவை ஒருவர் அழைத்து வந்திருந்தார்.
முந்தைய நாள் இரவில் மழை பெய்திருந்ததால், அங்கு கிடைத்த விறகுகள் அனைத்தும் ஈரமாக இருந்தன. அந்த விறகினை சமையல் செய்யப் பயன்படுத்த முடியவில்லை. அந்த சமயத்தில் பளியர்களிடம், ‘காய்ந்த விறகு வேண்டும்” என்று சமையர்காரர் கேட்டார். ஒரு பளியர் காட்டுக்குள் சென்று, 10 நிமிடநேரத்தில் திரும்பி வந்தார். ஒரு சுமை காய்ந்த விறகு கட்டு தலையில் வைத்துக்கொண்டு வந்து இறங்கினார்.
அம்மி, குழவி, உரல், எதுவும் இல்லாத அந்தக் காட்டுப் பகுதியில், சால்னா (குருமா?)வுக்காக முந்திரிப் பருப்பை மாவாக அரைக்க வேண்டியிருந்தது. வாழை இலையில் வைத்திருந்த அந்த முழு முந்திரிப் பருப்பை வாங்கிச் சென்ற ஒரு பளியர், 2 சிறிய பாறைகளைக் கழுவி, அவற்றின் மேல் வைத்து முந்திரிப் பருப்பை நசுக்கி, பின் தண்ணீர் ஊற்றி மறுபடி நசுக்கி மாவாக்கிஅதை கொண்டு வந்து சேர்த்தார். காலை உணவான கேசரியும், இட்லி, சட்டினி மற்றும் சாம்பார்.இவற்றை அங்கு வளர்ந்துள்ள ஏராளமான பசுமையான தேக்குமர இலைகளை பறித்து கவனத்துடன் அந்த இலைகளில் பரிமாறப்பட்டன.
தண்ணீரில் தொடர்ந்து ஆட்டம் போட்டு குதித்து நீராடி வந்து, மதியம் 1 மணியளவில் மாணவர்கள் எடுத்து வந்திருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தனர்.அப்பொழுது ஒரு மாணவன் புளியோதரைக் காரமும் நீர்ச்சத்துடன் உள்ள தேங்காய்ச் சில்லும் கொண்ட உணவை ’சொட்டை” போட்டு ருசித்துச் சாப்பிட்டான். (சொட்டை என்றால், சுவையான உணவில் மகிழ்ந்து, நாவால் குரலெழுப்புவது).
அங்கு குழுவாக வந்தவர்களுக்கு, மதிய உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஏராளமாக வளர்ந்துள்ள தேக்கு மரங்களில் இருந்து இலைகளைப் பறித்து, அந்த இலைகளில் சேதமில்லாத பெரியவைற்றைத் தேர்ந்தெடுத்து, இரண்டிரண்டு இலைகளாகச் சேர்த்து வைத்து, அவர்களுக்கு அதில் கறிச்சோறு பரிமாறப்பட்டது. அருவியில் கொட்டும் தூய்மையான தண்ணீரில் வைக்கப்பட்ட இரசத்தில் எண்ணெய் ஒட்டவே இல்லை. இயற்கையான சூழ்நிலையில், சுத்தமான காற்றை சுவாசித்து மகிழ்வுடன் சாப்பிட்டவர்கள், வழக்கத்தை காட்டிலும் நிறைய சோறு சாப்பிட்டார்கள் என்று சொல்லத்தான் வேண்டுமா என்ன?
அய்யனார் கோவில் அருவி, குற்றால அருவிகள் அளவு போல உயரமில்லையே தவிர, அதே அளவு மூலிகை வளம் கொண்ட சுவையான நீரினை வழங்குகிறது. குளோரின் கலக்காத இயற்கையான குளிர்ச்சி நீர்.அருவியில் தண்ணீர் அதிகம் வந்து, கீழே இருக்கும் பகுதி ஆழமாக இருந்ததால், ஒரு மாணவன் அருவியின் மேலிருந்து ‘சொர்க்” அடித்தான். அதாவது தண்ணீருனுள் தலைகீழாக விழுவது.
அதில் ஒரு மாணவன், ‘டேய்! இப்பத்தான் சாப்பிட்டு முடிச்ச. இன்னொரு முறை ‘சொர்க்” அடிச்சின்னா, சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வெளியே வந்துரும்டா!” ‘சொர்க்” என்பது காரணப்பெயர். உயரமான பகுதியிலிருந்து தாவி, கையை முதலில் நீட்டி, தலைகீழாகத் தண்ணீரினுள் விழும்பொழுது, நீரில் உண்டாகும் சத்தம் ‘சொர்க்” என்பது போலக் கேட்கும்.
12 அடி இடைவெளியில் இரண்டு அருவிகள் இருந்தன. பெரிய அருவி ஆண்களுக்கு.அடுத்த சிறிய அருவி, பெண்களுக்கு இந்த அருவிகள் ஆபத்தில்லாதது. ஒரு சிறுமி, தலையைக் குனிந்து, அருவியில் தலையைகாட்டிய பொழுது, அதிகம் குனிந்ததால், அருவி நீரின் வேகத்தில், கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி, நீரினுள் விழுந்துவிட்டது. அந்த அருவியின் வழியில், சிறிய பாறைகளை வைத்து,தண்ணீரைத் தடுத்து, கீழே சங்கிலியைத் தேடினால், தெளிவான தண்ணீரினுள், தரையில், தங்கம் மின்னுகிறது. தங்கம் கனமான பொருள் என்பதால், தண்ணீரில் அடித்துச் செல்லப்படாது, நேரே தங்க சங்கிலி தரைக்குச் சென்றுவிட்டது.
மாலை 4. 30 மணி. 50 பேர் அடங்கிய குழு, ஊருக்குத் திரும்ப தயாரானது. சமையலில் மீதமுள்ள சாப்பாடு, இரசம், பளியர்களுக்கு கொடுக்கப்பட்டது. முந்திரிப் பருப்பை மாவாக்கிக் கொடுத்த பளியரும், காய்ந்த விறகு கொண்டு வந்த பளியரும் ஆளுக்கொரு பழைய வேட்டியில் மீதமிருந்த சோற்றை, பெரிய பொட்டலமாக கட்டினார்கள்.
இரசத்தை எடுத்து செல்ல பளியர்களிடம் பாத்திரம் இல்லை. சமையல் குழு, சமையல் பாத்திரங்களை எடுத்து போக வேண்டும்.இரசம் யாருக்கும் பயனில்லாமல், கீழே ஊற்றப்பட்டது. பளியர்கள், சமையல் பாத்திரங்களை, அருவி அருகில் ஓடும் நீரில் கழுவிக்கொடுத்தார்கள். சாதாரண நாளில் அரிசி உணவு இல்லாத பளியர்கள், தரப்பட்ட உணவை பக்குவமாக வைத்திருந்து ஒரு வாரத்துக்குப் பயன்படுத்துவார்கள் என ஒரு சமையல்காரர் சொன்னார்.
காட்டுக்குள் இருந்த பொழுது எந்தத் திசை, எந்தப்பக்கம் என்று எங்களுக்கு தெரியவில்லை. பெரியவர் ஒருவர், உயரே அண்ணாந்து பார்த்து, சூரியன் இருக்கும் நிலையை சொல்லி, எங்களுக்குத் திசையை சொன்னார். எப்பொழுதும் பிள்ளையார் சிலை கிழக்குப் பக்கம் பார்த்துத்தான் இருக்கும் என்று சொன்ன பெரியவர், சற்றுத் தொலைவில் இருந்த பிள்ளையார் சிலையைக் காட்டினார். அதன்படிப் பார்த்தால், பெரியவர், சொன்ன திசை சரியாக இருந்தது.
ஒருவழியாக நாங்களும் அருவியில் போட்ட ஆட்டத்தை முடித்து கொண்டு, ஊருக்குப் புறப்பட்டோம். மாலை 6. 30 மணியளவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
திரும்பி வரும்பொழுது, மலையில் மேய்ந்துவிட்டு, வீடு திரும்பும் மாடுகளை கண்டோம். 10 அடி நீளத்துக்கு 2 அடி சுற்றளவுக்கு, பொறுக்கி எடுத்த, 50 கிலோ எடை கொண்ட விறகுகளை ஒன்றாகக் கட்டி, அந்த விறகை தலையில் சும்மாட்டின் மீது வைத்து, அதன் புவிஈர்ப்பு மையம், சரியாக உச்சந்தலையில், சும்மாட்டின் மீது படும்படி, விறகுக் கட்டை முன் பின் நகர்த்தி, சரிசெய்து வைத்துவிட்டு, தலையில் அழுத்தும் சுமையுடன் நடையும்,ஓட்டமும் கலந்த பாவனையில், நேராக, ஒரே சீராக, விரைவாக, நடைபோட்டு வெள்ளைச் சேலை உடுத்திய பெண்கள் நாள்தோறும் ஆறு மைல் அளவிற்கு நடந்து, திரும்பி வருகிறார்கள் என்றால், அவர்கள் தனியாக வேறு உடற்பயிற்சி ஒன்றும் செய்யத் தேவையில்லை.
ஒரு வாரம் சென்றதும், இரவு 12 மணியளவில் வித்தியாசமான இசைக்கருவிகளின் ஓசை பலமாகக் கேட்கவே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனக்குத் தூக்கம் கலைந்துபோனது. வீட்டின் சன்னல் வழியாக என் அம்மாவும் நானும் பார்த்தால், தெருவில் நீளமான எக்காள இசைக் கருவியில் வாய்வைத்து ஊதி, ஒருவர் ஒலி எழுப்புகிறார். பின்னால், ஒரு பெரிய மூங்கில் மரத்தில் தலைகீழாகக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள வேட்டையாடிய பெரிய அளவு மிளா. (மிளா என்பது மானை காட்டிலும் பெரிய அளவு பலங்கொண்ட மிருகம்). அதனுடன் ஏழெட்டுப்பேர் தொடர்ந்து வருகின்றனர். ‘மலையில வேட்டையாடிய மிளாவை தூக்கிக்கொண்டு, ஊருக்குள்ள வர்றாங்க” அந்த ஓசைதான் இந்த எக்காள ஒலி ( வீரத்தின் ஒலி – வெற்றியின் ஒலி) என்று என் அம்மா அப்பொழுது, என்னிடம் சொன்னார்கள்.
மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் பொழுது, வழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அந்த இறந்து போன வேட்டையாடப்பட்ட மிளாவை, ஒரு ஒற்றை மாட்டுவண்டியில், நிற்கும் படி, கம்புகளை முட்டுக்கொடுத்துக்கட்டி, மாட்டு வண்டி ஊர்வலம் வரத்தொடங்கியது. எக்காளம் உட்பட பல இசைக்கருவிகள் ஒலித்தன. வேட்டையில் தலைமை பொறுப்பேற்று, முன்னின்று போராடிய இளைஞர், மாட்டுவண்டியில் மிளாவுக்கு முன்னால் நின்று வந்தார்.
தெருவில் இருக்கும் கடைகள், வீடுகளில் இருந்தோர் ரூ. 1, ரூ. 2, ரூ. 5 அளவுகளில் பரிசுகள் கொடுத்தார்கள். (ரூ. 1க்கு 1 படி அரிசி வாங்கிய காலம்). கைத்தறித்துண்டு ஒன்றை துணிக்கடைக்காரர் வேட்டைக்காரத்தலைவனின் தலையில், முண்டாசாகக் கட்டி விட்டார். சுற்றி இருக்கும் தெருக்களில் ஊர்வலம் வந்து முடிந்த பின், வேட்டைக்காரத்தலைவன், தனது தேவைக்கான அளவு மிளாக் கறியை எடுத்து கொண்டு, மீதி கறியை விற்றுவிடுவார்.
பள்ளிக்கு வந்த பின், இச்செய்தியை தங்கப்பாண்டியன் ஆசிரியரிடம் கூறினேன். மலை, மலையை சார்ந்த இடம், காடு, காடுகளை சார்ந்த இடம் என வாழ்ந்த பழந்தமிழர்கள் வேட்டை நாயை அழைத்துக்கொண்டு, சிறிய ஆயுதங்களை,பயன்படுத்தி கொடிய விலங்குகளை வேட்டையாடினார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் வீரத்தமிழர்கள், மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதிக்கு போய் வேட்டையாடி வருவதும், வேட்டையாடிய வெற்றி வீரனைப் பாராட்டிப் பொதுமக்கள் பரிசு பொருட்கள் வழங்குவதும்.
இவ்வளவு செய்திகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன், வெளியூரிளுள்ள கல்லூரியில் சேருகிறான். முன்பின் தெரியாத வழிப்போக்கனும், இரவு நேரத்தில் வந்தால், ஓய்வெடுத்து, இளைப்பாறி செல்லும் வகையில் வீட்டுக்கு வெளியே திண்ணை போட்டு, வீடு கட்டும் பண்பாட்டில் வந்தவன் தமிழன். ஈகை, இரக்கம், உதவி, வீரம், மனிதநேயம் மற்றும் வாக்குத் தவறாமை ஆகிய நற்பண்புகளில் வந்த தமிழ்க்குலம் இன்று ஏன் இப்படி ஆனது என வருந்தி, நொந்து வாடினான் தமிழ்ச்செல்வன்.
1965ஆம் வருட கால கட்டத்தில், விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. 1968 ஆம் வருடம் வரை, அய்யனார் கோவில் அருவியில் இருந்து வரும் தண்ணீர் இராசபாளையம் பெரிய மந்தை வரை வந்தது. இப்பொழுது இருக்கும் தலைமுறையினருக்கு இந்த விபரமே தெரியாது.
அருவிக்கு மேல் தண்ணீரைத் தடுத்து, குழாய் மூலம் ஆறாவது மைலில் இருக்கும் குடிநீர்த் தேக்கத் தொட்டிக்கு அனுப்ப ஆரம்பித்த பின், பெரிய மந்தைக்குத் தண்ணீர் வராமலே நின்று விட்டது.அதிக தண்ணீர் வந்தால் தான், அருவியில் நீர் விழும். விவசாயத்துக்கு நீர் செல்லும். இல்லையேல் அருவிமேலேயே, குடிப்பதற்காகத் தண்ணீர் திருப்பி விடப்பட்டுவிடும். அருவிக்கு மேல் யாரும் போகக்கூடாது. ஆறாவது மைலில் திறந்துவிடப்படும், குடிநீர், சரிவாகக் குழாய்களில் கீழ் பகுதி நோக்கி, வரும் வேகத்தில், மின்சாரத் தேவையில்லாமலேயே மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிவிடும்.
1995ஆம் வருடம் அய்யனார் கோவில் அருவிப்பகுதி ஆனது காட்டு அணில்களின் சரணாலயமாக மாற்றப்பட்டது , ரூ. 2 பணம் தந்து, அனுமதிச் சீட்டு வாங்கி அருவிக்குச் செல்லலாம் என்ற நிலை இருந்தது.
காட்டு அணில்களின் சரணாலயம் உங்களை வரவேற்கிறது என்று எழுதிய அறிவிப்புப் பலகையில் ‘உங்களை வரவேற்கிறது” என்ற வாசகமானது இப்பொழுது எடுக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது பொதுமக்கள் யாரும் அருவிக்குச் செல்லமுடியாது. (எஸ்டேட்டில் பணிபுரிபவர்களும், பளியர்களும் மலைமேல் இன்றும் சென்று வரமுடியும்).
சேரநாட்டுத் தமிழர்களும், பாண்டிய நாட்டுத் தமிழர்களும் இயல்பாகப் பயன்படுத்திய, அய்யனார் கோவில் அருவியும் மலைப்பகுதியும் இன்று தடை விதிக்கப்பட்ட இடமாக மாறிவிட்டன. மலையின் பயன்பாட்டில், அய்யனார் கோவில் அருவியின் பயன்பாட்டில் தான் எத்தனை மாற்றங்கள்? இந்த மாற்றங்கள் அருவியில் மட்டும்தானா
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க



